சென்னை: பெண்கள் மத்தியில் பெரும் கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும் PCOD மற்றும் PCOS பாதிப்புகளுக்கு உலக அளவில் PMOS – Poly Endocrine Metabolic Ovarian Syndrome எனப் புதிய பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மீனாட்சி ஃபெர்ட்டிலிட்டி சென்டரின் கருத்தரித்தல் நிபுணர் மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
பிசிஓஎஸ் பாதிப்பு, அதற்கான காரணங்கள், கருத்தரிப்பில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அவர் விரிவான விளக்கங்களை அளித்தார்.
‘பிஎம்ஓஎஸ்’ (PMOS) பெயர் மாற்றம் ஏன்?
பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் என்பது வெறும் சினைப்பையில் ஏற்படும் ‘சிஸ்ட்’ (நீர்ச்கட்டி) பிரச்சனை மட்டும் அல்ல. இது உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு முழுமையான பாதிப்பாகும்.
இதன் காரணத்தினாலேயே, மே 12, 2026 முதல் இந்த பாதிப்பிற்கு PMOS – Poly Endocrine Metabolic Ovarian Syndrome எனப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கணக்கெடுப்பின்படி, இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களில் 10 முதல் 13 சதவீதம் பேர் (அதாவது 10 பெண்களில் ஒருவர்) இந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
அறிகுறிகள் என்னென்ன?
- உடல் பருமன் அதிகரிப்பு
- ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
- சினைப்பையிலிருந்து முட்டை வெளியேறுவதில் (Ovulation) தாமதம் அல்லது தடை
- கருத்தரிப்பதில் தாமதம்
- முகப்பருக்கள் மற்றும் முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி
- கழுத்து போன்ற தோல் மடிப்புகளில் ஏற்படும் கருமை நிறம்
- இன்சுலின் எதிர்ப்பித் திறன் (Insulation resistance) மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகள்
கருத்தரிப்பில் PMOS ஏற்படுத்தும் தாக்கம்
பிஎம்ஓஎஸ் பாதிப்பு உள்ள பெண்கள் அனைவருக்கும் கருத்தரிப்பில் தாமதம் ஏற்படும் என்பது தவறான புரிதலாகும்; பலர் இயற்கையாகவே கருத்தரிக்கின்றனர்.
சாதாரண பெண்களுக்கு ஆண்டுக்கு 12 முறை முட்டை வெளியேறும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், 2 முதல் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும் PMOS பாதிப்புள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு 4 முதல் 6 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. இதனாலேயே கருத்தரிப்பில் தாமதம் ஏற்படுகிறது.
முட்டை வெளியேற்றத் தடைக்கு 3 முக்கியக் காரணங்கள்
- ஹார்மோன் சமநிலையின்மை: மூளையிலிருந்து சுரக்கும் FSH மற்றும் LH ஹார்மோன்களின் சிக்னலில் தடை ஏற்படுவதால் சினைப்பையில் பாலிக்கிள் (Follicle) வளர்ச்சி அடைந்து முதிர்ச்சியடைவதில் தாமதம் ஏற்படுகிறது.
- ஆன்ட்ரோஜன் உயர்வு: டெஸ்டோஸ்டிரான் போன்ற ஆன்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கும்போது, முதிர்ச்சி அடைந்த பாலிக்கிள் உருவாகாமல் தடுத்து ஓவுலேஷனைத் தடுக்கிறது.
- இன்சுலின் எதிர்ப்புத் திறன்: உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்போது, சினைப்பையில் ஆன்ட்ரோஜன் அளவு மீண்டும் அதிகரித்து கருமுட்டை வெளியேற்றத்தைப் பாதிக்கிறது.
வாழ்க்கைமுறை மாற்றங்கள்: கட்டாயம் செய்ய வேண்டியவை
பாதிப்பு உள்ள பெண்கள் தங்கள் உடல் எடையில் 5 முதல் 10 சதவீதத்தைக் குறைத்தாலே, மாதவிடாய் சுழற்சி சீராகி இயல்பாகவே ஓவுலேஷன் நடக்க அதிக வாய்ப்புள்ளது.
- உணவு முறை: பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து, புரதச்சத்து, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் பாதாம், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகளைச் சேர்க்க வேண்டும்.
- உடற்பயிற்சி: ஜிம்மிற்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வாரத்திற்கு 150 நிமிடங்கள் (நாளைக்கு 30 நிமிடங்கள் வீதம், வாரத்திற்கு 5 நாட்கள்) மிதமான ஏரோபிக் பயிற்சிகள் (சுவாசம் சற்று வாங்கும் அளவிலான வேகமான நடைப்பயிற்சி) செய்ய வேண்டும். அல்லது வாரத்திற்கு 2-3 நாட்கள் ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகளைச் செய்யலாம்.
- தூக்கம் மற்றும் மனஅழுத்தம்: கேட்ஜெட்களைத் தவிர்த்து ஆரோக்கியமான தூக்கத்தைப் பெற வேண்டும். யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.
IVF சிகிச்சை அவசியமா?
பிஎம்ஓஎஸ் பாதிப்பு உள்ள அனைவரும் IVF சிகிச்சைக்குத்தான் செல்ல வேண்டும் என்பது தவறான கருத்து.
- முதல் கட்ட சிகிச்சை: லெட்ரோசோல் (Letrozole) போன்ற மாத்திரைகள் மூலம் பாலிகுலர் மானிட்டரிங் செய்து ஓவுலேஷனைத் தூண்டலாம்.
- அடுத்த கட்டங்கள்: மாத்திரைகள் பலன் தராவிட்டால் ஹார்மோன் ஊசிகள் அல்லது தேவைப்பட்டால் ‘லாப்ரோஸ்கோப்பி’ அறுவை சிகிச்சை மூலம் ஹார்மோன் சமநிலையின்மையைச் சரிசெய்யலாம். மேலும், ஐயுஐ (IUI) முறையும் பயன்படுத்தப்படலாம்.
- ஐவிஎஃப் யாருக்குத் தேவை?: அனைத்து சிகிச்சைகளும் தோல்வியடையும் பட்சத்தில், கணவருக்கு விந்தணு எண்ணிக்கை/நகர்வு குறைபாடு இருந்தால், ஃபலோபியன் குழாயில் (Fallopian tube) அடைப்பு இருந்தால் அல்லது பெண்ணின் வயது 36-க்கு மேல் இருந்தால் மட்டுமே ஐவிஎஃப் பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் கவனம் செலுத்த வேண்டியவை
பிஎம்ஓஎஸ் உள்ள பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பு, கர்ப்பகால சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் (Preeclampsia) போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
எனவே, கர்ப்பத்திற்கு திட்டமிடும் முன்பே மருத்துவரை அணுகி ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். கர்ப்ப காலத்திலும் மருத்துவர் அறிவுறுத்தலின்படி மிதமான உடற்பயிற்சிகளைச் தொடரலாம்.
திருமணத்திற்கு முன்பே ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள்
பெண்கள் பூப்படைந்த முதல் 4 ஆண்டுகள் வரை ஹார்மோன் அச்சுகள் (HPO axis) முதிர்ச்சியடைய நேரமெடுக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் பிசிஓடி என நோயறிதல் செய்வது தவறானது.
தற்போதைய காலகட்டத்தில் மரபியல் காரணங்கள், உடலுழைப்பற்ற வாழ்க்கைமுறை தவறான உணவுப் பழக்கம் மற்றும் தூக்கமின்மையே இளம் பெண்களிடம் இந்நோய் அதிகரிக்கக் முக்கியக் காரணமாகும்.
வயது மற்றும் ஏஎம்எச் (AMH) பரிசோதனையின் முக்கியத்துவம்
சிகிச்சை முறையைத் தீர்மானிப்பதில் திருமணமான காலத்தை விட பெண்ணின் வயதே முதன்மையான காரணியாகும். 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்குச் எளிய சிகிச்சையிலேயே தீர்வு கிடைக்கும்.
35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குச் சினைப்பையில் உள்ள கருமுட்டைகளின் எண்ணிக்கையைக் கண்டறிய ஏஎம்எச் (AMH – Anti-Mullerian Hormone) ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கருமுட்டை எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் IUI அல்லது ஐவிஎஃப் போன்ற அடுத்த கட்ட சிகிச்சைகளுக்கு விரைவாகச் செல்வது நல்லது.
நோயாளி மருத்துவரிடம் கேட்க வேண்டிய 6 கேள்விகள்
மருத்துவரை அணுகும் பெண்கள் பின்வரும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற வேண்டும்:
- எனக்கு இருப்பது பிஎம்ஓஎஸ் தானா? தாமதத்திற்கு வேறு காரணங்கள் உள்ளனவா?
- எனது ஓவுலேஷன் (கருமுட்டை வெளியேற்றம்) சரியாக நடப்பதை எப்படி உறுதிப்படுத்துவீர்கள்?
- ஃபலோபியன் குழாய் அடைப்பின்மையைச் சோதிக்க எப்போது ‘HSG’ பரிசோதனை செய்ய வேண்டும்?
- கணவருக்கு விந்தணு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா?
- எனது வயதிற்கு நான் இன்னும் எவ்வளவு காலம் இயற்கையாக முயலலாம்?
- தற்போதைய ஓவுலேஷன் சிகிச்சை எத்தனை சுழற்சிகள் வழங்கப்படும், அடுத்தகட்ட திட்டம் என்ன?
பிஎம்ஓஎஸ் சிகிச்சையைப் பொறுத்தவரை ‘அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை’ என்பது கிடையாது. ஒவ்வொரு பெண்ணின் உடலமைப்பு மற்றும் அறிகுறிக்கு ஏற்ப மாறுபடும் “பர்சனலைஸ்ட் ட்ரீட்மென்ட்”முறையே பின்பற்றப்படுகிறது என மருத்துவர் ராஜலட்சுமி தெளிவுபடுத்தியுள்ளார்.
