சிங்கப்பூர்: கல்வியில் சிறப்புற்று விளங்கும் மாணவர்களின் கல்விப் பயணத்தை மேலும் வளமாக்கும் நோக்கில், செட்டியார்கள் கோயில் குழுமம் தனது 14வது ஆண்டு கல்வி நிதியுதவி வழங்கும் விழாவைச் சிறப்பாக நடத்தியுள்ளது. இனம், மொழி மற்றும் சமயம் ஆகியவற்றைக் கடந்து, இந்த ஆண்டும் 275 மாணவர்களுக்கு ஏறத்தாழ $100,000 மதிப்பிலான உபகாரச் சம்பளம் மற்றும் கல்வி நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் வளாக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான விருதுகளையும் நிதியுதவிகளையும் வழங்கிச் சிறப்பித்தார்.
ஒற்றுமையே நாட்டின் ஆகப்பெரிய பலம்: அமைச்சர் ஓங் யி காங்
சமீபத்திய தேசிய தினப் பேரணி உரையை நினைவுகூர்ந்து பேசிய அமைச்சர் ஓங் யி காங், சிங்கப்பூரின் பன்முகத்தன்மையும் மக்களின் ஒற்றுமையுமே நாட்டின் ஆகப்பெரிய பலம் என்று சுட்டிக்காட்டினார். ஒரு சிறிய சமூகமான செட்டியார்கள் கோயில் குழுமம், பாகுபாடின்றி அனைத்து இன மாணவர்களுக்கும் கல்வி விருதுகளை வழங்கி வருவதைப் பாராட்டிய அவர், இது மிகவும் போற்றத்தக்க செயல் என்றார்.

மூப்படைதல் விவகாரங்களுக்கும் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஓங், “திறந்தநிலைப் பொருளியலில் குடும்பச் சூழல்கள் மாறுபடக்கூடும். இருப்பினும், எளியோருக்கு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கல்வி, புத்தாக்கம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் அனைவருக்கும் சமவாய்ப்பு உறுதிசெய்யப்படும்,” என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய அவர், கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், பெற்றோரையும் பெரியோரையும் மதித்து நடக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிவுறுத்தினார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மகிழ்ச்சி
கல்வி நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கணக்கியல், தரவு அறிவியல் செயற்கை நுண்ணறிவு இரட்டைப் பட்டப்படிப்பு மாணவரான 23 வயது மணிகண்டன் பிரவீன், தமது உதவி நிதியைச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்டார். அப்போது அவரது தாயார் சிந்தாமணி மணிகண்டனும் அருகில் இருந்தார்.
நிதி உதவி கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மணிகண்டன் பிரவீன், இந்த உதவித்தொகை தமது படிப்பு சார்ந்த கூடுதல் கல்வி மேம்பாட்டுச் செலவுகளுக்குப் பெரிதும் கைகொடுக்கும் என்றார்.
இதுகுறித்து அவரது தாயார் திருமதி சிந்தாமணி மணிகண்டன் பேசுகையில், “என் மகன் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வியில் தனது தகுதிகளை மேலும் வளர்த்துக்கொள்ள இணையவழிச் சான்றிதழ் படிப்புகளை மேற்கொண்டு வருகிறான். அதற்கான கட்டணங்களைச் செலுத்த இந்த உதவித்தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
அதேபோல, திருவாட்டி தனபாக்கியத்தின் மகன்களான தொடக்கப்பள்ளி மாணவர் சூரியபிரதாபன் மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர் சிவசூரியன் ஆகிய இருவருமே இந்த நிதி உதவியைப் பெற்றனர்.
தமது நெகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட திருவாட்டி தனபாக்கியம், “ஒரு ஒற்றைப் பெற்றோராகப் பிள்ளைகள் அடையும் இந்தச் சாதனை எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. இத்தகைய நிதி உதவி குடும்பத்தின் கல்விச் செலவுச் சுமையைக் குறைப்பதோடு, தேர்வுக் காலத்தில் அவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி வளங்களைப் பெறவும் துணைபுரியும். சமூக அளவில் கிடைக்கும் இந்த அங்கீகாரம், பிள்ளைகள் கல்வியில் இன்னும் சிறப்பாக விளங்க ஊக்கமளிக்கும்” என்றார்.
நிகழ்ச்சி குறித்துப் பேசிய செட்டியார்கள் கோயில் குழுமத்தின் தலைவர் மாணிக்கம் நாச்சியப்பன், “நாங்கள் ஒரு சமய நிறுவனமாக இருந்தாலும், சமூகத்திற்கான எங்கள் பொறுப்பு சொந்தச் சமூகத்தையும் தாண்டியது என்பதை உணர்ந்துள்ளோம். பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம், சிங்கப்பூரைப் பிணைக்கும் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் எங்கள் பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
