டாஷ்கண்ட், செப் . 06 : சீனாவில் நடைபெறவுள்ள AFC U20 CHINA ஆசியக் கோப்பை 2027 தொடருக்கான தகுதிச் சுற்றில், இந்திய 20 வயதிற்குட்பட்டோர் கால்பந்து அணி தனது கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. தாஷ்கண்டில் உள்ள ‘டூஸ்ட்லிக்’ மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற போதிலும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவது மற்றொரு போட்டியின் முடிவை நம்பியே உள்ளது.
குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதேவேளையில், இந்திய அணியின் ஆசியக் கோப்பை தகுதி வாய்ப்பு, ஞாயிறு இரவு நடைபெறும் சிரியா – உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவைப் பொறுத்தே அமையும். இப்போட்டியில் சிரியா அணி, போட்டியை நடத்தும் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தத் தவறினால், இந்திய ‘ப்ளூ கோல்ட்ஸ்’ அணி குரூப் பி பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும். இதன் மூலம், அனைத்துக் குழுக்களிலும் சிறப்பாகச் செயல்பட்ட 7 சிறந்த இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு AFC U20 சீனா ஆசியக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறும் சூழல் உருவாகும்.
டேனி மெய்தேயின் தொடக்கக் கோல்
போட்டியின் தொடக்க நிமிடங்களில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதின. இரு பக்கமும் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டன. எனினும், ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் இந்திய அணி தனது முதல் கோலைப் பதிவு செய்தது.
இந்திய வீரர் டேனி மெய்தே லைஷ்ராம் கொடுத்த அழுத்தத்தால், வங்கதேச தற்காப்பு ஆட்டக்காரர் முகமது அப்துல் ரியாத் ஃபஹீமிடம் இருந்து பந்து இந்திய வீரர் ஹதீம் அலியின் வசம் சென்றது. உடனடியாகச் செயல்பட்ட ஹதீம் அலி, எதிரணியின் இரண்டு தற்காப்பு வீரர்களைக் கடந்து சென்று, பெனால்டி பாக்ஸுக்குள் காலியாக நின்ற டேனிக்கு பந்தை அழகாக மாற்றினார். பந்தைப் பதற்றமின்றி உள்வாங்கிய டேனி, அதைத் துல்லியமாக கோலாக மாற்றி இந்தியாவை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.
இந்த கோல் இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்தது. ஆட்டத்தின் வேகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இந்திய அணி, பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்துக்கொண்டு இரண்டாவது கோலுக்கான வாய்ப்புகளை உருவாக்கியது. 34 – வது நிமிடத்தில் டேனி அடித்த ஃப்ரீ-கிக் கோலை நோக்கி ஆபத்தான முறையில் சென்றபோதிலும், வங்கதேச கோல்கீப்பர் ராஜ் சவுத்ரி விழிப்புடன் செயல்பட்டு அதைத் தடுத்தார்.
விஷால் யாதவின் சாகசக் கோல்
முதல் பாதியின் ஆதிக்கத்தை இரண்டாம் பாதியிலும் தொடர்ந்த இந்திய அணி, 60-வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடித்தது. இந்திய வீரர் வீசிய நீண்ட த்ரோ-இன் பந்தை ரிஷிகாந்தா தலைப்பகுதியால் தட்டி விட , அங்கிருந்த விஷால் யாதவ் மிகச் சிறந்த முறையில் பந்தை அக்ரோபாட்டிக் முறையில் கோல் வலையினpost-க்குள் தள்ளினார். எதிர்பாராத இந்த கோலால் வங்கதேச அணி அதிர்ச்சியடைந்தது.
இரண்டு கோல்கள் பின்தங்கிய நிலையிலும் மீண்டு வர முயன்ற வங்கதேச அணி, சற்றே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், இந்திய அணியின் தற்காப்பு வரிசை கட்டுக்கோப்புடன் செயல்பட்டு, எதிரணிக்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்காமல் தடுத்தது.
மாற்று வீரர் அார்பாஷ் அசத்தல்
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் மகேஷ் காவ்லி, ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் டேனி மற்றும் விஷால் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக முகமது அர்பாஷ் மற்றும் பிரஷன் ஜாஜோ ஆகியோரை மாற்று வீரர்களாகக் களமிறக்கினார். பயிற்சியாளரின் இந்த உத்திக்கு உடனடியாக பலன் கிடைத்தது. களத்திற்கு வந்த 7-வது நிமிடத்திலேயே (79-வது நிமிடம்) அர்பாஷ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
யைபாரம்பா சிங்காக்கம் தொடங்கிய அந்த தாக்குதலில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து பந்தைப் பரிமாறிக் கொண்டு வங்கதேசத் தற்காப்பு அரணை உடைத்தனர். இறுதியாக பந்தைப் பெற்ற அர்பாஷ், தனது இடது காலால் சக்திவாய்ந்த முறையில் அடித்து கோல் வலையின் மேல் பகுதியில் பந்தைப் புகற்றினார். இதனால் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அனிகேத் யாதவ், ஓமங் தொடும் மற்றும் டேனியல் மக்கக்மயும் ஆகியோரை காவ்லி களமிறக்கினார். இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வசதியான வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய அணி விவரம்: சுராஜ் சிங் அஹைபம் (கோல்கீப்பர்), யைபாரம்பா சிங்காக்கம், பங்க்சன் சிங் தகேல்லம்பம், சுமித் சர்மா பிரம்மச்சாரிமயம் (கேப்டன்), ஷாமி சிங்கமயம் (டேனியல் மக்கக்மயும் 88’), ரிஷி சிங் நிங்தோக்பம், டேனி மெய்தே லைஷ்ராம் (முகமது அர்பாஷ் 72’), மாலெம்ஙம்பா சிங் தோக்சோம், விஷால் யாதவ் (பிரஷன் ஜாஜோ 72’), ரிஷிகாந்தா மெய்தே லைஷ்ராம் (அனிகேத் யாதவ் 85’), ஹதீம் அலி (ஓமங் தொடும் 85’).
தன் பங்கிற்குச் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்திய யு-20 அணி, 20 ஆண்டுகால ஆசியக் கோப்பை கனவு நனவாகுமா என்பதை அறிய சிரியா – உஸ்பெகிஸ்தான் போட்டியின் முடிவை எதிர்நோக்கியுள்ளது.
