செட்டிநாட்டுச் சுவையை பர்கர் பன்னுக்குள் அடைப்பது ஒரு ஆபத்தான முயற்சியாகத் தோன்றலாம். ஆனால், சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள உணவகத்தில் அந்தமுயற்சி மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது.

காரசாரமான செட்டிநாட்டு உணவுகளை நகரின் பல்வேறு இடங்களில் நாம் பல வடிவங்களில் ருசித்திருக்கிறோம். இருப்பினும், சென்னையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ‘கல்பாசி’ உணவகம், நாம் இதுவரை கண்டிராத ஒரு புதிய வடிவில் செட்டிநாட்டு உணவை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
காரைக்குடி மற்றும் செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பழனியப்பன் – தான் சிறுவயது முதல் உண்டு வளர்ந்த பாரம்பரிய உணவை முற்றிலும் வித்தியாசமான முறையில் மக்களுக்கு வழங்க விரும்பினார். அதன்படி, துரித உணவக வடிவங்களான பர்கர்கள், டாகோ டார்ட்டுகள் (Taco tarts) மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய ‘மீல் பாக்ஸ்கள்’ -Customisable meal boxes- ஆகியவற்றில் செட்டிநாட்டு மணத்தையும், சமையல் நுட்பங்களையும் நேர்த்தியாகப் புகுத்தியுள்ளார்.
பாரம்பரியத்தை நினைவூட்டும் உள்கட்டமைப்பு
உணவைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக, இந்த உணவகத்தின் அமைப்பைப் பற்றி கண்டிப்பாகப் பேச வேண்டும். உணவகத்திற்குள் அடியெடுத்து வைப்பது செட்டிநாட்டில் உள்ள ஒரு பாரம்பரிய வீட்டிற்குள் நுழைவது போன்ற உணர்வைத் தருகிறது. செட்டிநாடு வீடுகளின் முக்கிய அடையாளமான ‘திண்ணை’ அமைப்புகளும் உள்ளே அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் விரும்பினால் இந்த திண்ணை இருக்கைகளில் அமர்ந்தே உணவருந்தலாம்.

மர வேலைப்பாடுகள், விசாலமான நடைபாதை அமைப்பு மற்றும் பாரம்பரியத் தரை வடிவமைப்பு ஆகியவை உணவகத்திற்கு ஒரு கதகதப்பான, எளிமையான மற்றும் சொந்த வீட்டுச் சூழலை வழங்குகின்றன.
புத்துணர்ச்சியூட்டும் தொடக்கம் முதல் நவீன டாகோ வரை
நமது உணவு உபசரிப்பு ‘வாட்டர்மெலன் நன்னாரி மூலம் தொடங்கியது. சென்னையின் மதிய வெயிலுக்கு இந்த பானம் ஒரு சிறந்த நிவாரணமாகவும், உணவைத் தொடங்குவதற்கு அருமையான வழியாகவும் அமைந்தது.
அடுத்ததாக ‘பிரான் நெய் ரோஸ்ட் டாகோ டார்ட்ஸ்’ (Prawn ghee roast taco tarts) பரிமாறப்பட்டது. டார்ட் ஓட்டிற்குள் அமைந்திருந்த அந்த நெய் ரோஸ்ட், அதன் வழக்கமான காரத்துடனும், வெண்ணெய் மணத்துடனும், காரசாரமான சுவையுடனும் மிகத் தெளிவாக வெளிப்பட்டது.
தொடர்ந்து வந்த ‘வாழைக்காய் க்ரோக்கெட்ஸ் – Raw banana croquettes’ புதினா மிளகாய் தொடுசூப்புடன் -Mint chilli dip மிகவும் சுவையாகவும் நேர்த்தியாகவும் தயாரிக்கப்பட்டிருந்தது. வாழைக்காயின் அடர்த்தியான தன்மையும், அதன் மொறுமொறுப்பான வெளிப்புறமும் ஒரு நல்ல ‘ஃபிஷ் ஃபிங்கர்’ சாப்பிடும் அனுபவத்தை நினைவூட்டியது.
மேஜையில் பரிமாறப்பட்ட உணவுகளில் மிகவும் அமைதியான, ஆனால் அதிக சுவையளித்த உணவாக ‘சிக்கன் முட்டை பொரியல்’ அமைந்தது. நன்கு மசாலா சேர்க்கப்பட்ட வருவலுடன், Gongura dip Starter வழங்கப்பட்டிருந்தது. அந்த இலையின் புளிப்புச் சுவை ஒவ்வொரு துண்டிலும் ஊடுருவி சுவையை மேலும் கூட்டியது.
பர்கர்களின் புதிய பரிணாமம்
உணவகத்தின் புதிய அடையாள உணவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சிக்கன் 65 பர்கர்’ அடுத்ததாக வந்தது. Coriander chilli bun, மொறுமொறுப்பான சிக்கன் patty மற்றும் பூண்டு கொத்தமல்லி மேயோனைஸ் சேர்க்கப்பட்டு பணக்காரச் சுவையுடன் பரிமாறப்பட்டது. மிகச் சரியாகச் சேர்க்கப்பட்ட அனைத்துக் கலவைகளும் அதற்குப் பரவலாகக் கிடைத்து வரும் வரவேற்பிற்கு முற்றிலும் தகுதியானது என்பதை உறுதிப்படுத்தியது.
வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் ‘பில்ட்-யுவர்-ஓன் பர்கர்’ பிரிவில், ‘பீட்ரூட் பெருஞ்சீரக பன்’ மற்றும் காய்கறி கலவையுடன் கூடிய ‘கல்பாசி ஸ்பெஷல் சாஸ்’ ஆகியவை மண்ணின் இனிப்பையும் மென்மையான காரத்தையும் கலந்து எதிர்பாராத ஒரு சுவையான அனுபவத்தைக் கொடுத்தன.
இந்த மூன்றிலும் மிகவும் முழுமையான சுவையைக் கொண்டிருந்தது Tomato curry leaf bun ஆகும். மட்டன் செட்டிநாடு பூரணம் மற்றும் செட்டிநாடு சாஸுடன் சேர்த்துச் செய்யப்பட்ட இந்த பர்கர், பாரம்பரிய செட்டிநாட்டுச் சுவையின் முழுப் பரிமாணத்தையும் தாங்கி நின்றது.
பாரம்பரியமும் நவீனமும் இணைந்த இனிப்புகள்
இனிப்பு வகைகளில் முதலில் வந்த ‘கவுனி அரிசி சீஸ்கேக்’ ஆரம்பத்தில் சிறு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், சாப்பிட்ட பிறகு அந்தச் சந்தேகத்தை முற்றிலும் போக்கியது. கருப்பு கவுனி அரிசியும் சீஸ்கேக்கும் இணைந்த இந்த புதிய கலவை மிகவும் கவரும் விதமாக இருந்தது. கவுனி அரிசியின் இயற்கைச் சுவையும், சீஸ்கேக்கின் கிரீமி தன்மையும் அமைதியாகவும் சிறப்பாகவும் ஒன்றிணைந்திருந்தன.

நிறைவாக வந்த ‘அதிரசம் கேக்’ ஒரு பாரம்பரியமான முடிவாக அமைந்தது. பாரம்பரிய அதிரசத்தின் வெல்லம் மற்றும் அரிசி மாவின் இனிப்புச் சுவை, கேக் வடிவிலும் அதன் தனித்தன்மை மாறாமல் மிகச் சரியாகக் கொண்டுவரப்பட்டிருந்தது.
உணவக விவரங்கள்:
- இருவர் உணவருந்துவதற்கான சராசரி செலவு: ₹1,000++ (வரிகளுக்கு உட்பட்டது)
- செயல்படும் நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை
- முகவரி: கல்பாசி உணவகம், நுங்கம்பாக்கம், சென்னை.