சென்னை , செப் 07: இந்திய வாகன உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது நிர்வாக அளவிலான பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பை வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 20 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.இது தற்போதைய அளவை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான உயர்வாகும்.
தற்போது ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் 4,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அதில் பெண்களின் பங்களிப்பு 8 %-க்கு சற்று அதிகமாக உள்ளது.நிறுவனத்தின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளாக்கிய வளர்ச்சி (DEI) மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த எண்ணிக்கையை 20 %- மாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது ஹூண்டாய் நிறுவனத்தில் பெண்கள் உற்பத்தித் துறை, பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), விற்பனை, சேவை, பெருநிறுவன மேலாண்மை மற்றும் உயர் தலைமைப் பொறுப்புகள் என அனைத்துப் பிரிவுகளிலும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.2030-க்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய புதிய பெண் ஊழியர்களைப் பணியமர்த்துவது மட்டுமின்றி, ஏற்கனவே பணியாற்றும் பெண்களை நிறுவனத்திலேயே தக்கவைத்து அவர்களை அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்துவதும் அவசியமாகிறது.
தற்போதுள்ள நிர்வாக ஊழியர் தரவை விட, புதிதாகக் சேர்க்கப்படும் இளம் பயிற்சியாளர்கள் பிரிவில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.2026-ஆம் ஆண்டில் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேலாண்மைப் பயிற்சியாளர்கள் (Management Trainees) மற்றும் பொறியியல் பயிற்சியாளர்களில் (Engineer Trainees) சுமார் 45% பேர் பெண்கள் ஆவர்.இது வரும் நான்கு ஆண்டுகளில் நிர்வாக நிலைகளில் பெண்களின் பங்களிப்பை கூட்டுவதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.
கல்வி நிறுவனங்களுடனான தொடர்பை விரிவுபடுத்துதல் மற்றும் தகுதி சார்ந்த மதிப்பீட்டு முறைகளை ஆள்சேர்ப்பு நடைமுறைகளில் பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலம் இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது.மேலும், கடந்த 2025-26 நிதியாண்டில் (FY26) நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களின் பதவி உயர்வு மற்றும் உயர்மட்டப் பொறுப்புகளுக்கான முன்னேற்ற விகிதம் 23% பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழங்கப்படும் சிறப்புக் சலுகைகள்
பெண்களின் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆள்சேர்ப்பு, தொழில் முன்னேற்றம், பெற்றோர் ஆதரவு மற்றும் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றைக் உள்ளடக்கிய பல விரிவான திட்டங்களை நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, Women @ Work 2.0 திட்டத்தின் கீழ் மகப்பேறு மற்றும் பெற்றோர் ஆதரவு, குழந்தைப் பராமரிப்பு உதவி, நெகிழ்வுத்தன்மை கொண்ட பணிச்சூழல் மற்றும் விடுப்பிற்குப் பின் மீண்டும் பணியில் இணைவதற்கான ஆதரவு நடவடிக்கைகள் வழங்கப்படுகின்றன.அதேபோல், ‘டிரெயில்பிளேஸ்ஹெர்’ (TrailblazHER) என்ற முன்முயற்சி மூலம் பெண்களுக்கான திறன் மேம்பாடு, வழிகாட்டுதல் (Mentorship) மற்றும் தொழில் வளர்ச்சி சார்ந்த ஆதரவுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், உற்பத்தி ஆலைகளில் குழந்தைப் பராமரிப்பு மையங்கள்), நல்வாழ்வு மையங்கள், பணியாளர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு வசதிகளையும் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
முன்னெச்சரிக்கை சுகாதாரப் பரிசோதனைகள், பெண்கள் ஆரோக்கிய விழிப்புணர்வு, புற்றுநோய் பரிசோதனை மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற அம்சங்களும் நிறுவனத்தின் ஊழியர் நலத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
2026-ஆம் ஆண்டின் பயிற்சிப் பிரிவில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, ஆரம்ப கட்ட திறமைசாலிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.இருப்பினும், 2030-க்குள் 20 சதவீத இலக்கை அடைவது என்பது, பெண் ஊழியர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது, தொடர்ச்சியான பதவி உயர்வுகள் மற்றும் அவர்களை உயர் நிர்வாகப் பொறுப்புகளுக்குக் கொண்டு செல்வது ஆகியவற்றையே முழுமையாகப் பொறுத்துள்ளது.
மேம்பட்ட உற்பத்தி முறைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்களால் வாகனத் துறையின் தேவைகள் மாறிவரும் சூழலில் பரந்த அளவிலான திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் நிறுவனங்கள் செலுத்தும் கவனம் அதிகரித்துள்ளதை இந்த இலக்கு வெளிப்படுத்துகிறது.
இந்த அறிவிப்பு குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தருண் கார்க் கூறுகையில், “வெவ்வேறு அனுபவங்கள், பார்வைகள் மற்றும் திறன்களைக் கொண்ட நபர்களை ஒன்றிணைப்பது வலுவான குழுக்களை உருவாக்கவும், புதுமைகளைப் புகுத்தவும் உதவும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்.2030-க்குள் நிர்வாகப் பணியாளர்களில் 20% பெண் பங்களிப்பை எட்டுவது என்பது வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் அனைவருக்குமான வளமான சூழலை உருவாக்குவதற்குமான எங்களது கடப்பாட்டைக் காட்டுகிறது””என்றார்.
